நமது நாட்டின் உணவு எண்ணெய் பற்றாக்குறை 2020ஆம் ஆண்டில் 73.5 விழுக்காடு அளவிற்கு அதிகரிக்கும் என்று இந்திய வணிக கூட்டமைப்பு (அசோசம்) கூறியுள்ளது.
கடலை எண்ணெய், நல்லெண்ணை, சோயா எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய் ஆகியவற்றை உணவு எண்ணெய்களாக இந்தியாவில் பயன்படுத்துகிறோம்.
நமது நாட்டின் தனி நபர் எண்ணெய்த் தேவை ஆண்டிற்கு ஆண்டு 4.25 விழுக்காடு அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் 1986-87ஆம் ஆண்டுகளில் 49.59 இலட்சம் டன்களாக இருந்து நமது நாட்டின் உணவு எண்ணெய்த் தேவை 2006-07ஆம் ஆண்டில் 114.5 இலட்சம் டன்களாக அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை அளித்துள்ள அசோசம், இதன் அடிப்படையில் கணக்கிட்டால், நமது நாட்டின் தனி நபர் எண்ணெய் பயன்பாடு (ஆண்டு ஒன்றி்ற்கு) இந்த 20 ஆண்டுகளில் 6.43 கி.கி. இருந்து 10.23 கி.கி. ஆக உயர்ந்துள்ளது தெரிகிறது என்று கூறியுள்ளது.
எண்ணெய் பயன்பாடு தனி நபர் அளவில் அதிகரித்து வரும் அதேவேளையில், நாட்டின் மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால், அதிகரிக்கும் தேவையை உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஈடுகட்டுவது சுலபமானதல்ல என்று அசோசம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது 47.1 இலட்சம் டன்னாக உள்ள எண்ணெய்த் தேவை பற்றாக்குறை, 2020ஆம் ஆண்டில் 81 இலட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.