2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொழில், நிதி, வணிகத் துறைகளில் நடந்த மிக மிக முக்கியமான தகவல்கள், நிகழ்வுகளின் தொகுப்பு.
ஜனவரி 02: இந்திய உருக்கு ஆணையம் (செயில்) சேலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி.
ஜனவரி 03: புதுவையில் வாட் வரி திருத்த மசோதா நிறைவேற்றம்.
ஜனவரி 04: மக்காச் சோளம் ஏற்றுமதிக்கு தடை- கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை.
ஜனவரி 10: உலகத்திலேயே விலை குறைந்த காரான நானோ ரக காரை டாடா மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.1 லட்சம் என அறிவித்தது.
ஜனவரி 10: இதுவரை இல்லாத அளவிற்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 21,206.77 புள்ளிகளை தொட்டது.
ஜனவரி 11: மகாராஷ்டிராவில் நுழைவு வரி நீக்கம்.
ஜனவரி 12: கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.3,660 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
ஜனவரி 14: பாரத ஸ்டேட் வங்கி உரிமை பங்கு வெளியிட முடிவு.
ஜனவரி 16: ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குகளை வெளியிட உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
ஜனவரி 21: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17,605.35 புள்ளியாகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,208.80 புள்ளியாக குறைந்தது.
பிப்ரவரி19: ஊரக மின்கட்டுமான கழகம் (Rural Electrification Corporation) பொது பங்குகளை வெளியிட்டது.
பிப்ரவரி20: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், உகான்டா நாட்டைச் சேர்ந்த தொலேபேசி நிறுவனத்தை வாங்கியது.
பிப்ரவரி23: அயல்நாடு வாழ் இந்தியரான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, உலகின் சிறந்த 10 பெண் தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவர் என்று பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்தது.
பிப்ரவரி26: மக்களவையில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ஐந்தாவது முறையாக
ரயில்வே நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 29 மக்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
மார்ச் 02: ரிச்சர்ட் பிராண்ட்சன் வர்ஜின் மொபைல் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது.
மார்ச் 09: டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் டி.வி.எஸ் கிங் ஆட்டோ அறிமுகம்.
மார்ச் 17: சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
மார்ச் 21: உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த, சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு.
மார்ச் 22: பாமாயில் இறக்குமதி வரி குறைப்பை திரும்ப பெற வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தம் கூறினார்.
மார்ச் 25: பங்கு பரிவர்த்தனை முத்திரை கட்டணம் குறைக்க டில்லி மாநில அரசு முடிவு.
மார்ச் 26: மாருதி சுஜூகி நிறுவனம் சுவிஃப்ட் டிஜியர் ரக காரை அறிமுகப்படுத்தியது.
மார்ச் 27: மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4,000 நஷ்டஈடு வழங்குவதாக கேரளா முடிவு அறிவித்தது.
மார்ச் 28:உருக்கு, சிமெண்ட், பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதி வரிச் சலுகை ரத்து.
மார்ச் 31: இந்தியாவின் அந்நிய நாட்டு கடன் 201 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஏப்ரல் 01: இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பது பற்றியும், பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) எச்சரித்தது.
ஏப்ரல் 01: சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 08: ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 34 நாடுகளில் இருந்து இறக்குமதி வரி சலுகை வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஏப்ரல் 10: உருக்கு, இரும்பு கம்பி தகடு போன்றவற்றின் விலை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வரை உருக்காலைகள் உயர்த்தின.
ஏப்ரல் 11: சிமெண்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
ஏப்ரல் 11: இந்தியா தொலைபேசி அதிகம் வைத்துள்ள இரண்டாவது நாடாக வளர்ந்துள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 300 மில்லியன்
பேர் தொலைபேசி வைத்துள்ளனர். இது அமெரிக்காவில் தொலைபேசி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 21: மக்களவையில் 67 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பொருள் வழங்கு துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
ஏப்ரல் 22: மக்களவையில், உள்நாட்டு விவசாயிகளிடம் வாங்கும் விலையை விட அதிக விலைக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
ஏப்ரல் 23: பால் பவுடர், இதர பால் பொருட்களின் ஏற்றுமதி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
ஏப்ரல் 26: ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்ட, பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு “செபி” அனுமதி வழங்கியுள்ளது.
ஏப்ரல் 29: ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சலுகை மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஏப்ரல் 29: உருக்கு, சிமெண்ட் போன்ற சில பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
மே 11: சிறிய ரக கார் நானோவை அறிமுகப்படுத்தியதற்காக ரத்தன் டாடாவை, உலக அளவில் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் 73 பேரில் ஒருவராக பிரபல டைம் இதழ் தேர்ந்தெடுத்தது.
மே 19: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு குறைந்தபட்ச மாற்று வரியை விதிக்க சி. ரங்கராஜன் தலைமையிலான பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது.
மே30: 2007-08 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என அறிவிக்கப்பட்டது. முன்னதாக பொருளாதார வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
மே 31: மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம், ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜீன் 2: பிரிட்டனின் புகழ் பெற்ற ஜாகுவார், லாண்ட் ரோவர் வாகன உற்பத்தி நிறுவனங்களை போர்ட் மோட்டாரிடம் இருந்து டாடா மோட்டார் வாங்கியது.
ஜீன் 4: பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை ரூ.3 அதிகரித்தது.
ஜீன் 5:மத்திய அரசு நேற்று அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விமான பெட்ரோல் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்தது. இதனை தொடர்ந்து பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், விமான பெட்ரோல் விலையை 4.3 விழுக்காடு குறைத்துள்ளன.
ஜீன் 11: உலக வர்த்தக அமைப்பிற்காக,தோஹாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஏற்படாத வகையில், இந்தியா திரைக்கு பின் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஜீன் 11: ஜப்பானைச் சேர்ந்த டயிசி சான்க்யோ (Daiichi Sankyo) மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ரான்பாக்ஸி நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 4.6 பில்லியன் டாலருக்கு வாங்க போவதாக அறிவித்தது.
ஜீன் 12: கலப்பு உரத்தின் விலையை மத்திய அரசு குறைத்தது.
ஜீன் 12: விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு குவின்டாலுக்கு ரூ.105 உயர்த்தியுள்ளது. இதன்படி பொதுவான ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.850 ஆக வழங்கப்படும். ஏ.ரகம் எனப்படும் சன்னரக நெல்லுக்கு குவின்டால் ரூ.875 வழங்கப்படும்.
ஜீன் 20: இந்தியாவின் பணவீக்கம் இரண்டு இலக்கமாக அதிகரித்தது. பணவீக்கம் 11.5 விழுக்காடாக உயர்ந்தது.
........... தொடரும்