மதுரை: தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில்களுக்கு வார விடுமுறையை 2 நாட்களுக்குப் பதிலாக, ஒரு நாளாக குறைக்க வேண்டும் என, மதுரை மாவட்ட சிறு, குறந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) கோரிக்கை விடுத்துள்ளது.
மின் பற்றாக்குறையை சமாளிக்க தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 விழுக்காடு மின் வெட்டிலிருந்து, 15 விழுக்காடாக குறைத்திருப்பதை மடீட்சியா வரவேற்கிறது.
மின் பற்றாக்குறையை சமாளிக்க உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 40 விழுக்காடு மின் வெட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைப்பது அல்லது வாரத்தில் 5 நாட்கள் முழுமையாக தொழிற்சாலைகள் இயக்கவும் 2 நாட்கள் கட்டாய விடுமுறையும் விட வேண்டும் என்ற மின் துறை அமைச்சரின் யோசனை மடீட்சியா வரவேற்கிறது.
அதேநேரத்தில் தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 விழுக்காடாக மின் வெட்டிலிருந்து 15 விழுக்காடாக குறைப்பது அல்லது தொழிற்சாலைகள் முழுமையாக இயக்கி வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை விட வேண்டும் என்ற முடிவு முரண்பாடாக உள்ளது.
ஆகவே, தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்பதற்குப் பதிலாக, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்க வேண்டும்.
அத்துடன் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள மின் தடையை முழுவதுமாக நீக்க முயற்சி செய்து, சிறுதொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என மடீட்சியா துணைத் தலைவர் என். சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.