கொச்சி: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என்று தெரிகிறது.
இதனை உறுதி படுத்தும் விதமாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கொச்சியில் நேற்று காங்கிரஸார் மத்தியில் பேசுகையில், பெட்ரோல் போன்றவைகளின் விலையை குறைப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது உலக சந்தையில் விலைகள் (கச்சா எண்ணெய்) குறைந்துள்ளது. இதனால் விலையை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை ஆழ்ந்து பரிசீலித்து வருகிறோம். நுகர்வோர் நலன்களை அரசு பாதுகாக்கும்.
அதே நேரத்தில் பொது விநியோக முறையில் மண் எண்ணெய் அடக்க விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் தினசரி ரூ.33 கோடியும், சமையல் எரிவாயு விற்பனையால் தினசரி ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை எந்த தேதியில் இருந்து குறைக்கப்படும் என்பதை தியோரா தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை ரூ.2 குறைத்தது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 40 டாலருக்கும் குறைந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11ம், டீசல் விலை ரூ.3 குறைக்க வாய்ப்பு உள்ளது.