நவரத்னா, மினி ரத்னா அந்தஸ்தில் உள்ள நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி நிதியை பொதுத்துறை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான காலத்தை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நீட்டித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பொதுத்துறை பரஸ்பர நிதித் திட்டங்கள் திருப்திகரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எனவே, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மட்டுமே அத்திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்ற அனுமதியை அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பதாக ப.சிதம்பரம் கூறினார்.
பொதுத்துறை பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு பின்பற்ற வேண்டிய முதலீட்டுக்கான வரையறைகள் காரணமாக அவை அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பைப் பெற முடியாது என்று கருதப்பட்டது.
ஆனால், பொதுத்துறை பரஸ்பர நிதி நிறுவனங்கள் தொழில்முறை நிர்வாகம், தொழில்முறை நிர்வாக சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றுள்ளதால், முதலீடு முடிவுகளை சிறந்த முறையில் எடுக்க முடிகிறது.
எனவே, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக தற்போது கருதப்படுகிறது. தனிநபர்களும் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என சிதம்பரம் தெரிவித்தார்.