பணவீக்கம் 6.61% ஆக குறைவு
, வெள்ளி, 26 டிசம்பர் 2008 (14:13 IST)
உற்பத்தி, உணவுப்பட்டியலில் உள்ள சில பொருட்களின் விலை சரிந்ததால், நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து ஏழாவது வாரமாக குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.61% ஆக உள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த பணவீக்க அளவாகும். இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 6.84% ஆக இருந்தது.ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.91% ஆக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த பணவீக்கம், தற்போது ஐம்பது விழுக்காடு வரை சரிந்து 6.61% ஆக சரிந்து உள்ளதால் விரைவில் நாட்டின் நிதி நிலைமை ஓரளவு சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.டிசம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை, சிமெண்ட், பருத்தி நூல் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பணவீக்கம் குறைந்ததாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் உணவுப் பொருட்கள் பட்டியலில் உள்ள பழங்கள், காய்கறிகள், தேயிலை, பருப்பு வகைகள், உணவுக்கு நறுமணம் சேர்க்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், மீன், கோதுமை ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 4% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தாலும், எரிபொருள் பட்டியல் தொடர்ந்து மாற்றமின்றி காணப்படுகிறது.