சுய உதவிக்குழுக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் வங்கியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த வங்கிகளுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்குகிறது.
சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பில் வங்கிக்கடன் உதவியானது, பெரும்பங்கை வகிக்கின்றது. இதனடிப்படையில் 2008-09ஆம் ஆண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிகள் மூலமாக கடன் இணைப்பு வழங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.
சுழல்நிதி பெறாத சுமார் 1.50 இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிபெறுவதற்காக குழுவிற்கு ரூ.10,000 என்ற அடிப்படையில் ரூபாய் 150 கோடி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், குழுக்களுக்கு வங்கிக்கடன் முதல் இணைப்பாக குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாயும், இரண்டாம் மற்றும் மீண்டும் மூன்றாம் இணைப்புகளாக முறையே ரூபாய் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் ரூபாய் எனவும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சுய உதவிக்குழுக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் வங்கியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விருதுகள் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த சாதனையாளர்களை ஊக்குவிப்பதுடன் வங்கியாளர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியுணர்வையும் ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவில் சிறந்த மூன்று வங்கிகளுக்கும், சிறந்த ஐந்து வங்கிக் கிளைகளுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதில் சிறந்த வங்கிகளுக்கான விருது மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. சிறந்த வங்கிக் கிளைகள் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ள விருதுகளில் இரண்டு சிறந்த சுயஉதவிக் குழுக்களுக்கான தனிப்பட்ட கிளைகளுக்கும், 3 பொதுவான சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த மாவட்ட அளவிலான விருதுகள் மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களிலுள்ள வங்கி கிளைகளுக்கும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான சிறந்த வங்கிகள் மற்றும் வங்கிக்கிளைகளை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தேர்வுக்குழுவினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநில அளவிலான தேர்வுக்குழுவிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் தலைவராகவும், மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவிற்கு அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்களும், வங்கிப்பிரதிநிதிகளும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த வங்கிகள் மற்றும் வங்கிக்கிளைகளுக்கான தேர்வானது ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள நிதி ஆண்டின் 12 மாதங்களில் அடைந்துள்ள சாதனைகளின் அடிப்படையில் தேர்வுக்குழுவினரால் சிறந்த வங்கிகள் மற்றும் வங்கிக்கிளைகள் தேர்வு செய்யப்படவுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.