புது டெல்லி: சிமெண்ட் ஏற்றுமதிக்கு விதித்து இருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
சிமெண்ட் விலை கடுமையாக அதிகரித்ததால், ஏப்ரம் மாதம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது சிமெண்ட் ஏற்றுமக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அயல் நாட்டு வர்த்தக ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சிமெண்ட் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 175 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக குஜராத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது குறித்து சிமெண்ட் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஹெச்.எம்.பங்கூர் கூறுகையில், இது நல்ல முடிவு தான். இருப்பினும் இதனால் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அயல்நாடுகளுக்கு குஜராத்தில் இருந்து தான் அதிக அளவு சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்வதற்கு முன்னரே தடை நீக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்க, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கூறினார்.