புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இந்தியாவை பாதிக்காமல் இருக்கும் வகையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என்று அரசு சூசகமாக தெரிவித்தது.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு, இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தது.
தற்போது பணவீக்கம் குறைந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறையாமல் இருக்கும் பொருட்டு வட்டியை குறைப்பதுடன், பொருளாதார சீர்திருத்தத்தை முழு வேகத்தில் செயல்படுத்த அரசு எண்ணியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆய்வறிக்கையில், மற்ற நாடுகளில் பணத்தின் தேவை அதிகரிப்பதால், இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது. நிதி நெருக்கடியால் தொடர்ந்து உற்பத்தி துறையில் பாதிப்பு இருக்கும்.
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாதத்தில் வளர்ச்சி குறையும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாகவே இருக்கும்.
சென்ற ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருந்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், ஏற்றுமதி குறைந்துள்ளது. அத்துடன் அந்நிய முதலீடு வருவதும் தடைபட்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு பண்டங்களின் விலையும்,. கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது, பணவீக்கம். 2007 மார்ச் மாத நிலைக்கு குறைவதற்கு உதவிகரமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 12.91% ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 6.84% ஆக குறைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததை தொடர்ந்து, ஏற்கனவே பல வங்கிகள் ரியல் எஸ்டேட், வீட்டு வசதி, சிறு, நடுத்தர தொழில்கள் போன்றவைகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. சமீபகாலமாக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் நிதி சந்தையில் ரூ.3 லட்சம் கோடி வரை பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.