கொச்சி: இணையம் வாயிலாக தேயிலை ஏல வர்த்தகத்தை மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இன்று கொச்சியில் தொடங்கிவைத்தார்.
தற்போது தேயிலை பல இடங்களில் ஏலம் விடும் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல மையங்களை இணையம் வழியாக இணைத்து ஏலம் விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொச்சி தேயிலை மையத்தில் இணையம் வாயிலாக தேயிலை ஏல வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கவுகாத்தி, சில்குரி, ஜல்பகுரி ஆகிய நகரங்களில் உள்ள தேயிலை ஏல மையங்களில், இணையம் வாயிலாக தேயிலை ஏலம் விடப்படுகிறது.
இந்த முறை தற்போது கொச்சி தேயிலை மையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தொடங்கிவைத்து ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், இந்தியாவில் உள்ள எல்லா தேயிலை மையங்களிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இணையம் வாயிலாக தேயிலை ஏலம் விடும் முறை அறிமுகப்படுத்தப்படும். அதற்கு பிறகு தற்போதைய நேரடி ஏல முறை இருக்காது.
இன்று மாலை கோவையில் உள்ள தேயிலை ஏல மையத்திலும், நாளை குன்னூர் ஏல மையத்திலும் இணையம் வாயிலாக தேயிலை ஏல வர்த்தகம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் ஏழு நகரங்களில் உள்ள தேயிலை ஏல மையங்களிலும் இணையம் வாயிலான வர்த்தகம் தொடங்கப்பட்டுவிடும்.
இணையம் வாயிலாக ஏலம் விடுவதால், தேயிலை வர்த்தகம் அதிகரிக்கும். தென் இந்தியாவல் 220 மில்லியன் (22 கோடி) கிலோ உற்பத்தியாகிறது. இதில் 133 (13 கோடி 20 லட்சம்) மில்லியன் கிலோ ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தேயிலை வாரியம் முன்பு அறிமுகப்படுத்திய மின்னணு ஏல முறை தோல்வி அடைந்துவிட்டது. ஏனெனில் இது வி-சாட் தொழில்நுட்ப முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இணையம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையால் தேயிலை வாங்குபவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஏலத்தின் மூலம் தேயிலை வாங்கலாம். இதனால் ஏலம் விடுபவர், வாங்குபவரும் சேர்ந்து தவறு செய்ய முடியாது. தேயிலை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏலக்காய், புகையிலை ஆகிய இரண்டின் வர்த்தகத்திலும் இணையம் வாயிலாக ஏலம் விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறினார்.
தேயிலை வாரிய சேர்மன் பாசுதேப் பானர்ஜி பேசுகையில், கடந்த 147 வருடங்களாக நேரடியாக தேயிலே ஏலம் விடும் முறையில் வர்த்தகம் நடந்து வருகிறது. இதற்கு மாற்றாக இணையம் முறையிலான வர்த்தகம் இருக்கும். தேயிலை வாரியத்தின் நோக்கம் காலத்திற்கு ஏற்றாவாறு பாரம்பரிய முறைகளும் மாறவேண்டும் என்பதே.
இநத நிகழ்ச்சியில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் ஆர்.டி.நஜீம், கொச்சி தேயிலை வர்த்தகர்கள் சங்க தலைவர் கிருஷ்ண குமார் ஜே.ஷா உட்பட பல வர்த்தகர்களும், பிரமுகர்களும் பங்கேற்றனர்.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம், இணையம் வாயிலாக தேயிலை ஏல வர்த்தகத்திற்கு தேவையான மென்பொருளை வடிவமைத்துள்ளது.