மும்பை: இந்தியாவின் தனியார் துறையில் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேலாண்மை இயக்குநராக சந்தா கோச்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது மேலாண்மை இயக்குநராக இருக்கும் கே.வி.காமத் பதவிகாலம் முடிவடைவதால், புதிய மேலாண்மை இயக்குநராக சந்தா கோச்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அடுத்த வருடம் மே 1 ஆம் தேதி முதல் ஐந்து வருடங்களுக்கு, கே.வி.காமத் முழுநேரம் அல்லாத சேர்மனாக நீடிப்பார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதிய மேலாண்மை இயக்குநராக சந்தா கோச்கரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக கே.வி.காமத்திற்கு பதிலாக புதிய மேலாண்மை இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற பல்வேறு ஊகங்களுக்கு விடை கொடுக்கப்பட்டது. ஆனால் ஊடகங்களில் சந்தா கோச்கர் நியமிக்கப்படுவார் என்ற செய்தி பரவலாக வெளியிடப்பட்டது.
தற்போது சந்தா கோச்கர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இணை மேலாண்மை இயக்குநராகவும், நிதி பிரிவு தலைமை அதிகாரியாகவும் இருக்கின்றார். இந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படவில்லை.
புதிதாக மேலாண்மை இயக்குராக நியமிக்கப்பட்டுள்ள சந்தை கோச்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பலமான வங்கியாக இருக்கின்றது. தற்போதைய சவாலான நேரத்திலும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்.
வங்கிக்கு தேவையான முதலீடு இருப்பதுடன், பரந்த அளவில் கிளைகளும் உள்ளன.
தற்போது வங்கி பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவு வைப்பு நிதி பெறுகிறது. இந்த முறை மாற்றப்படும். சேவிங்ஸ், கரண்ட் கணக்குகளில் இருந்து வைப்பு நிதி பெற முயற்சி மேற்கொள்ளும்.
இந்க நிதி ஆண்டில் வங்கி கொடுக்கும் கடன் அளவு 5 முதல் 10 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள வட்டி விகித்தால் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் தான் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கு குறைவாக உள்ளது.
வங்கிகள் திரட்டும் நிதிக்கான வட்டியும், அவை கொடுக்கும் கடன்களுக்கான வட்டியும் நிச்சயமாக குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது எப்போது நடக்கும் என்று கூறுவது கஷ்டமானது. அரசு கடன் பத்திரங்கள், நிறுவன கடன் பத்திரங்கள், அதிக தொகை வைப்பு நிதி போன்றவைகளின் வட்டி குறைந்து வருகிறது. எனவே வங்கிகள் திரட்டும் நிதியின் வட்டியும் குறையும் என்று கூறினார்.
தற்போதைய மேலாண்மை இயக்குநர் கே.வி.காமத் கூறுகையில், இந்தியாவில் அடுத்த இரண்டு வருடங்களில், ஒரு இலக்க வட்டிக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி வருகிறது. இதே போல் இரண்டு இலக்க வளர்ச்சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது என்று கூறினார்.