சிமெண்ட் பங்குகளில் ஆர்வம்
Source: sharekhan dot com
மும்பை: சிமெண்ட் விற்பனை அதிகரிக்கும் என்பதால், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொருளாதார காரணிகளில் பெரிய அளவு மாற்றம் இல்லாததாலும், ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் போன்றவை மந்தகதியில் இருப்பதால் சிமெண்ட் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில் மத்திய அரசு குறைத்துள்ள உற்பத்தி வரியால், குறிப்பிட்ட அளவுதான் விலைகளை குறைத்துள்ளன. இவை மூட்டைக்கு ரூ.9 முதல் 10 வரை குறைத்துள்ளன.
சிமெண்ட் விற்பனை அக்டோபர் மாதம் மந்தமாக இருந்தது. நவம்பர் மாதம் அதிக அளவு சிமெண்ட் விற்பனையாக துவங்கியுள்ளது. இந்த இரண்டு மாதங்களையும் சேர்த்து சிமெண்ட் துறையின் வளர்ச்சி, சென்ற வருடம் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.2% ஆக உள்ளது.
இதில் சாதமான அம்சம் என்னவெனில், சிமெண்ட் உற்பத்தி செலவு மூட்டைக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிலக்கரி விலை குறைந்துள்ளது. (நிலக்கரி விலை, அதிக பட்சமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது 60% குறைந்துள்ளது). டீசல் விலை குறைக்கப்பட்டதால், போக்குவரத்து செலவு குறைந்துள்ளது. அத்துடன் சிமெண்ட் மூட்டைகளாக போடும் செலவும் குறைந்துள்ளது.
இவற்றின் பலன்கள் இந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டின் இலாப-நஷ்ட கணக்குகளில் தெரியவரும்.
சிமென்ட் விற்பனை அதிகரிப்பு, உற்பத்தி செலவு குறைந்துள்ளது போன்ற காரணங்களினால், சிமெண்ட் நிறுவனங்களின் வட்டி, வரி, தேய்மானம் போன்வைகளுக்கு முந்தைய இலாபம், 2010 நிதி ஆண்டில் 8 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சிமெண்ட் நிறுவனங்களின் இலாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் பங்கு விலைகள் ஏற்கனவே 30 முதல் 60 விழுக்காடுவரை குறைவாக உள்ளன. எனவே கூடிய விரைவில் சிமெண்ட் துறை பங்குகளின் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள சிமெண்ட் நிறுவன பங்குகளில் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்கு விலை அதிக அளவு உயர வாய்ப்பு உள்ளது. மிட்கேப் பிரிவில் உள்ள பங்குகளில் ஸ்ரீ சிமெண்ட், மதராஸ் சிமெண்ட் பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.