திருப்பூர் : ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பிரதமர் பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இருப்பினும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் சலுகையில் இடம் பெறவில்லை என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ஏ.சக்திவேல் விடுத்த அறிக்கையில், மத்திய நிதியமைச்சக பொறுப்பேற்றவுடன் ஜவுளி ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவை வரவேற்கிறோம். அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளித்துறை ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது இந்நிறுவனங்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஜவுளி பொருட்களின் ஏற்றுமதிக்கு முன்பும், பின்பும் வழங்கக்கூடி பேக்கிங் கிரெடிட் கடனுக்கான வட்டியை 2 விழுக்காடு குறைத்துள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால் 4 விழுக்காடு வட்டி சலுகை கேட்டிருந்த நிலையில் 2 விழுக்காடு மட்டுமே குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே கூடுதலாக 2 விழுக்காடு வட்டியை குறைத்து அறிவிக்க வேண்டும்.
ஜவுளி மேம்பாட்டு நிதி (டஃப்) திட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய நிதிக்காக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஏற்றுமதி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது.
வெளிநாட்டு பையிங் ஏஜென்சி நிறுவனங்களுக்குத் தரக்கூடிய கமிஷனுக்கான சேவை வரியில் 10 விழுக்காடு திருப்பியளித்தல், சென்வாட் வரியை 4 விழுக்காடு குறைத்துள்ள உத்தரவுகளை வரவேற்கிறோம்.
மேலும் டெர்மினல் கலால் வரி, மத்திய விற்பனை வரி ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு, ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையாக கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்துக்கு கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது தனி நபர்களை சார்ந்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிக நன்மையளிக்கக் கூடியது.
பிரதமர் அறிவித்துள்ள இச்சலுகைகள் வரவேற்கக் கூடியதாக இருப்பினும் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்படவில்லை.
ஏற்றுமதியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் செலவினங்களுக்கான சேவை வரியை திருப்பி அளிக்க வேண்டும். மேலும், பருத்தி பின்னலாடைகளுக்கு டிராபேக் விகிதத்தை 12 விழுக்காடாக உயர்த்தித் தரவேண்டும் என்று கோரியுள்ளார்.