புது டெல்லி: இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 0.4 விழுக்காடாக சரிந்து உள்ளது.
தொழில் துறை உற்பத்தி 1993-94 ஆம் ஆண்டில் இருந்த அளவை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.
சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொழில் துறை உற்பத்தி 12.2 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஏற்றுமதி 12 விழுக்காடு குறைந்துள்ளது. இது பல்வேறு உற்பத்தி நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து தொழில் துறை உற்பத்தியும் சரிந்துள்ளது.
தற்போதைய தொழில் துறை உற்பத்தி சரிவு, மத்திய அரசு எதிர்பார்த்ததை விட அதிக அளவாக உள்ளது. மத்திய அரசு மந்தமான பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்ட டிசம்பர் 7 ஆம் தேதி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் தொழில் துறை வளர்ச்சியை நோக்கி போகும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இது குறித்து பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சுரேஷ் தென்டுல்கர் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்ததை விட, தொழில் துறை உற்பத்தி புள்ளி விபரம் மிக குறைவாக உள்ளது. இது ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி அட்டவணையில், பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பு 80 விழுக்காடாக உள்ளது.
தொழில் துறை உற்பத்தி பற்றிய கணக்கெடுப்பில், 17 வகையான தொழில் துறைகளின் உற்பத்தி விபரம் கணக்கிடப்படுகிறது. இதில் 10 துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் குறையும்.
ஏனெனில் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும், மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில், தொழில் துறையின் பங்கு 29.4 விழுக்காடாக உள்ளது.
மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி. கே. பிள்ளை கருத்து தெரிவிக்கையில், நவம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி மேலும் குறையும் என்று கூறினார்.