திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையே அனுமதியின்றி இயங்கி வந்த 2 சாய பட்டரைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.
திருப்பூர் ராம்நகர் முதல் வீதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே முருகன், பிரபாகரன் ஆகியோர் பட்டன்கள், ஜிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு சாயமிடும் சாய பட்டரைகளை மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி நடத்தி வந்துள்ளனர்.
இந்த சாய பட்டரைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுநீரை இரவு நேரங்களில் சாக்கடை கால்வாயில் திறந்து விட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அனுமதியின்றி இயங்கும் இந்த சாய பட்டரைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், முருகன், செல்வராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் புதன்கிழமை ஆய்வு நடத்தியதில், அனுமதியின்றி சாய பட்டரைகளை நடத்தியதும், கழிவுநீரை சாக்கடையில் கொட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சாயமிடப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து ஆலையை மூட உத்தரவிட்டனர்.
அத்துடன், அதன் உரிமையாளர்களிடம் தொடர்ந்து இதுபோல் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதியின்றி சாயஆலை நடத்த மாட்டோம் என்ற உறுதிமொழியையும் மாநகராட்சி அதிகாரிகள் எழுத்துபூர்வமாகப் பெற்றுக்கொண்டனர்.