Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்வாட் வரி நீக்கம்: வணிக சங்க கூட்டமைப்பு வரவேற்பு

சென்வாட் வரி நீக்கம்: வணிக சங்க கூட்டமைப்பு வரவேற்பு
, புதன், 10 டிசம்பர் 2008 (18:05 IST)
ஈரோடு : ஜவுளித் தொழில் மீதான 4 விழுக்காடு சென்வாட் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதற்கு, ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியின் காரணமாக, இந்திய ஜவுளித் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மக்களின் வாங்கும் தேவைகளை அதிகமாக்கவும், பொருள்களின் அபரிமிதமான விலையேற்றத்தைக் குறைக்கவும், பண வீக்கத்தைக் குறைக்கவும், மத்திய அரசு 2009ல மார்ச் வரையிலான காலத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவில் தொழில் வளர்ச்சிக்கான சலுகைகளை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

பெட்ரோலியப் பொருள்கள் நீங்கலாக மீதமுள்ள அனைத்துத் துறைகளிலும் நிலவி வரும் 14,12,8,4 விழுக்காடு கலால் வரிகள் முறையே 10,8,4,0 ஆக குறைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனால் இரும்பு, வாகனங்கள், சிமென்ட், ஜவுளிப் பொருள்களின் விலை குறையும்.

மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் நாப்தா மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது, மின் திட்டங்களுக்கு உத்வேகம் கொடுக்கும்.

இரும்புத்தாது மீதான ஏற்றுமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இரும்புப் பாலங்கள் மீதான வரி 15 விழுக்காட்டில் இருந்து, 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. இதனால் மற்ற நாடுகளுடன் நாம் போட்டிபோட இயலும்.

ஜவுளித் தொழில் மீதான 4 விழுக்காடு சென்வாட் வரியை முற்றிலும் நீக்கியிருப்பதும், டஃப் திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கியிருப்பதும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தரும்.

ரிசர்வ் வங்கி "ரெப்போ ரேட்', "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' விகிதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்திருப்பதன் மூலம், ஜவுளித் தொழில் கடன்களின் மீதான வட்டி விகிதம் வெகுவாகக் குறைய ஏதுவாக இருக்கும்.

ஏற்றுமதியாளர்கள் கிளியரிங்- பார்வேர்டிங் ஏஜண்ட்களுக்கவழங்கும் சேவை வரியில் 10 விழுக்காடு திரும்பப் பெறலாம் என்ற அறிவிப்புக்குப் பதிலாக, ஏற்றுமதியாளர்களின் அனைத்து சேவை வரியையும் நீக்க வேண்டும்.

இதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கலன் அமைக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் கடனுதவி வழங்குதல், சிறு, குறு தொழிற்கடன் மீதான வட்டி விகிதத்தை 9 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்குமாறு செய்தல், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் பராமரிப்புகளுக்கு அதிக தொகை ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

கலால், சுங்க வரியில் மாறுதல் செய்து, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மீதான விலையை வெகுவாகக் குறைக்க வேண்டும். டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும். வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் குளிர்சாதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.

விலை குறைப்பு நடவடிக்கையைத் துவங்கியுள்ள மத்திய அரசு, உடனடியாக அனைத்துத் திட்டங்களுக்கும் போதுமான நிதியை ஒதுக்கி, வேளாண்- தொழில் வளர்ச்சி முற்றிலும் முடங்கிவிடாமல் இருக்க வழி செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் என்.சிவநேசன், பொதுச்செயலர் டி.ஜெகதீசன், பொருளாளர் வி.கே.ராஜமாணிக்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil