புது டெல்லி: ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் வட்டியை குறைத்துள்ளதால், மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகார செயலாளர் அசோக் சாவ்லா தெரிவித்தார்.
முன்பு வட்டியை குறைக்காத வங்கிகளுக்கு, தற்போது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை தெளிவான சமிக்ஞை என்று அசோக் சாவ்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே முக்கால் விழுக்காடு வரை வட்டி குறைத்துள்ளன. ஆனால் தனியார் துறை வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இணை மேலாண்மை இயக்குநர் சந்திரா கொச்சார் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வட்டி விகிதம் குறையும். அதே நேரத்தில் வைப்பு நிதிக்கான வட்டியும் குறையும் என்று தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.சக்கரபர்த்தி கூறுகையில், கடன் மீதான வட்டி, வைப்பு நிதி வட்டி இரண்டும் குறையும். ஏற்கனவே நாங்கள் கடன்களுக்கு வட்டியை குறைத்துள்ளோம். தற்போது வட்டி குறைக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அதை செய்வோம். உடனடியாக வட்டியை குறைக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.