புது டெல்லி: கார்களின் விற்பனையை அதிகப்படுத்த, பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை குறைக்கும் விதமாக சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னணி கார் தாயரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம், இதன் வேகன்-ஆர் ரக காரின் விலையில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. அத்துடன் காப்பீடு கட்டணத்தையும் செலுத்துகிறது. சென்ற மாதம் வேகன்-ஆர் ரக காருக்கு ரூ.12 ஆயிரம் தள்ளுபடியும், காப்பீடு கட்டணத்தையும் செலுத்தியது. தற்போது இந்த சலுகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதே போல் ஆல்டோ ரக காருக்கும் ரூ.7 ஆயிரம் வரை சலுகை வழங்கப்படுகிறது.
ஹூன்டாய் நிறுவனமும் அதன் சான்ட்ரோ, மற்ற ரக கார் வாங்குபவர்களுக்கு காப்பீடு கட்டணத்தை செலுத்துவதுடன், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மற்ற பாகங்களையும் பொறுத்தி தருகிறது.
அமெரிக்க கார் நிறுவனமான போர்ட் நிறுவனம் சீடன் பிஸ்டா ரக காரின் விலையை ரூ.91 ஆயிரம் வரை குறைத்துள்ளது.
வங்கிகளில் கடனுக்கான வட்டி அதிகரித்ததுடன், கடன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள நிதி, பொருளாதார நெருக்கடியால் கார், மோட்டார் பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் விற்பனை குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு தற்போது விற்பனையை அதிகரிக்க கார் கம்பெனிகள் பல சலுகைகளை அறிவிக்கின்றன.
இதே போல் தனியார் வங்கிகளுக்கு போட்டியாக பொதுத்துறை வங்கிகளும் வாகன கடன் கொடுப்பதில் ஆர்வம் காண்பித்து வருகின்றன.