Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை அரசி்ன் சலுகை அறிவிப்பு-கமல்நாத்

நாளை அரசி்ன் சலுகை அறிவிப்பு-கமல்நாத்
, வெள்ளி, 5 டிசம்பர் 2008 (17:07 IST)
புது டெல்லி: பொருளாதார மந்த நிலையை மாற்றி, வளர்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக நாளை பிரதமர் மன்மோகன் சிங், புதிய. சலுகைகளை அறிவிப்பார் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடியால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.

இது போன்ற நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சில சலுகைகளை நாளை அறிவிக்க உள்ளன.

இன்று இந்தியா-ரஷியா நாடுகளின் தொழில் அதிபர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது பற்றி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவின் கூட்டம் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசின் உதவிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

அதற்கு அடுத்த நாள் அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில், செயலாளர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், திட்ட குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பல்வேறு துறையைச் சேர்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி உட்பட பல்வேறு தொழில் துறைகளுக்கு உதவிகள் வழங்குவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, சென்ற புதன் கிழமையன்று, உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஏழு வருடங்களில், முதன் முறையாக அக்டோபர் மாதத்தில் 12 விழுக்காடாக குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஜவுளி, கைவினை பொருட்கள், வைரம் போன்ற ஆபரணங்கள், இன்ஜினியரிங் துறை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு எடுத்துள்ள கணக்கெடுக்கின் படி. 121 ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 65 ஆயிரம பேர் வேலை இழந்துள்ளனர். இந்த வருடம் ஜவுளி துறையில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மேலும் ஐந்து லட்சம் பேருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நாளை பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.

மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு, உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாடீல்,தனது பதவியை ராஜினமா செய்தார். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சகத்தின் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நாளை மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.

அத்துடன் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு, வங்கிகளின் இருப்பு விகிதம் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil