புது டெல்லி: இந்தியாவின் காபி ஏற்றுமதி 24 லட்சம் மூட்டை குறைந்துள்ளது என சர்வதேச காபி அமைப்பு கூறியுள்ளது.
பல்வேறு நாடுகளில் காபி உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய தகவல்களை இன்டர்நேஷனல் காபி ஆர்கனைசன் [International Coffee Organisation (ICO)] என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது.
இதன் ஆய்வறிக்கையில், சர்வேதேட அளவில் 2007-08 நவம்பர் முதல் அக்டோபர் வரை உள்ள காபி ஆண்டில், காபி ஏற்றுமதி 2.9 விழுக்காடு குறைந்துள்ளது. (60 கிலோ எடை உள்ள சுமார் 951 லட்சத்து 10 ஆயிரம் மூட்டை). இதில் இந்தியாவின் ஏற்றுமதி 24 லட்சம் மூட்டை குறைந்துள்ளது.
2006-07 ஆம் ஆண்டு காபி விளையும் நாடுகளில் இருந்து 97.96 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. 2007-08 ஆம் காபி ஆண்டில் அராபிக ரகம் 62.5 மில்லியன் மூட்டை, ரோபஸ்டா ரகம் 32.6 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று இதன் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் காபி ஏற்றுமதியில் இந்தியா நான்காவது நாடாக உள்ளது. இந்தியாவில் இருந்து ரோபஸ்டா ரகம் 17 லட்சம் மூட்டையும், மற்ற ரகங்கள் 7 லட்சத்து 40 ஆயிரம் மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் காபி ஏற்றுமதியில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. இதன் ஏற்றுமதி 4.17 விழுக்காடு குறைந்துள்ளது. பிரேசிலில் இருந்து 24.64 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தான்ஜினியாவின் ஏற்றுமதி 7.82 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த நாட்டில் இருந்து 7,42,608 மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோமிரான் ஏற்றுமதி 23.13 விழுக்காடு குறைந்துள்ளது. இங்கிருந்து 5,66,383 மூட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உகாண்டா, பாபுவா நியு கினியா, இந்தோனிஷியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி 36 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
பாபுவா நியு கினியா 1.12 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்துள்ளது. (சென்ற ஆண்டு 8,23,505 மூட்டை).
உகாண்டா 3,21 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தோனிஷியா 5.13 மில்லியன் மூட்டை ஏற்றுமதி செய்துள்ளது.
2008-09 காபி ஆண்டில் காபி 131 மில்லியன் மூட்டை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு அதிகம். (சென்ற ஆண்டு 118.2 மில்லியன் மூட்டை).
தற்போது பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காபி பயன்படுத்தும் நாடுகளில் காபியின் தேவை குறையாது. 2008 ஆம் ஆண்டு 128 மில்லியன் மூட்டை தேவை என்று கூறியுள்ளது.