இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு, குறைந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வங்கிகளில் கடனுக்கான வட்டி அதிக அளவு உள்ளதால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் ஜீலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு பொருளாதார வளர்ச்சி விபரம் வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது. இந்த மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக்காடாக உள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் 7.9 விழுக்காடாக இருந்தது.
இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வங்கிகளின் இருப்பு விகிதத்தை குறைத்து, பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன் வட்டியையும் குறைத்துள்ளது.
இது குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஏ.பிரசன்னா கூறுகையில், தற்போது வெளியிட்ப்பட்டு உள்ள அறிக்கையை ஆய்வு செய்தால், பல்வேறு பொருட்களின் விற்பனை உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வரும். அத்துடன் ஏற்றுமதி குறைந்துள்ளதையும் அறிய முடியும். அடுத்து வரும் மாதங்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை மாற்ற ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்று நம்பலாம் என்று கூறினார்.