பலவகை பயிர்களுக்கும் ஒருங்கினைந்த பயிர் காப்பீடு திட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விவசாய துறை செயலாளர் டி.நந்தகுமார் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில தலைநகர் சண்டீகரில் அக்ரோ டெக்-2008 என்ற விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது.
இதில் மத்திய விவசாய துறை செயலாளர் டி.நந்த குமார் பேசுகையில், பலவகையான பயிர்களுக்கும் பயன்படும் வகையில் ஒருங்கினைந்த பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
விவசாயிகள் மண்ணை பரிசோதித்து, அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதனால் விளைச்சல் அதிகரிப்பதுடன், வருவாயும் அதிகரிக்கும்.
அரசு உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நவீன முறையில் சேமித்து வைக்கவும், விரையமாவதை குறைக்கவும் முயற்சித்து வருகிறது.
விவசாய நீர் தேவைக்காக மழையை மட்டுமே நம்பியுள்ள மாநிலங்களில், தண்ணீரை சேமிப்பதே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதில் அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.