புது டெல்லி: உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைபட தேவையில்லை. இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புது டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு விடும் என்று கூறிய பிரதமர், 1991 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை உதாரணமாக சுட்டிக் காட்டினார். ( 1991 ஆம் ஆண்டு சில ஆசிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அவற்றின் பொருளாதாரம் சீர்குலைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் அதிக பாதிப்பு இல்லை)
தற்போது நிலைமை, 1991 இல் இருந்ததை விட கடுமையானது தான். ஆனால் இதில் இருந்து மீண்டு வந்துவிட முடியும்.
இதை எதிர் கொள்ள, நிதி, பொருளாதார, அரசு முதலீடு, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் உட்பட எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
உலக பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதுடன், நிலைமை தெளிவாக இல்லை. இந்த பிரச்சனை இங்கு உருவாகவில்லை, வேறு எங்கேயோ தானே ஏற்பட்டது என்று நமக்கு பாதிப்பு இருக்காது என்று நினைக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன.
அதே நேரத்தில் உலக அளவில் நிலைமை எப்படி இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் எட்டு விழுக்காடு வளர்ச்சி அடைவதற்கான திறனும், திறமையும் நமக்கு இருக்கிறது.
இந்தியாவின் தொழில் துறை தேக்கமடையாமல், தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க உறுதி பூண்டுள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்.