புது தில்லி : இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, முதல் ஆறு மாதங்களில் அதிமுக்கிய பொருட்களின் இறக்குமதி ரூ.20,560.2 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.16,216.6 கோடி மதிப்புள்ள அதி முக்கிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறக்குமதி 26.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அனைத்துப் பொருட்களின் ஒட்டுமொத்த இறக்குமதி ரூ.66,1208 கோடியாக இருந்தது.
இது கடந்த ஆண்டு ரூ.45,6407 கோடி மட்டுமே இருந்தது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை, பால், பால் பொருட்கள், உணவு தானியங்களின் இறக்குமதி சிறிதளவு குறைந்துள்ளது.
ஆனால் சமையல் எண்ணெய், ஆட்டோமொபைல் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பருத்தி மற்றும் பட்டு, எஸ்எஸ்ஐ உற்பத்திப் பொருட்கள், ரப்பர், வாசனைப் பொருட்கள், மதுபான வகைகள், மார்பிள், கிரானைட், தேயிலை மற்றும் காபி ஆகிய பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இதில் சமையல் எண்ணெய் இறக்குமதி ரூ.6182.89 கோடியாக அதிகரித்துள்ளது. (இது கடந்த ஆண்டு ரூ.6009.23 கோடியாக இருந்தது) சுத்திகரிக்காத சமையல் எண்ணெய் இறக்குமதி 6.5 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி 79.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதில் பாமாயில் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா, சீனா, கொரியா, மியன்மார், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, மலேசியா, தாய்லாந்து, செக் குடியரசு, இத்தாலி, பெனின், ஐவரி கோஸ்ட், ஆஸ்திரேலியா, எகிப்து, சுவீடன், கினியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிமுக்கிய பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது.
அர்ஜென்டினா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது.