Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழில் வளர்ச்சியை பரவலாக்க புதிய ரயில் திட்டங்களுக்கு மாநில அரசு பங்கு தொகை வழங்க வர்த்தக சங்கம் வலியுறுத்தல்!

Advertiesment
தொழில் வளர்ச்சியை பரவலாக்க புதிய ரயில் திட்டங்களுக்கு மாநில அரசு பங்கு தொகை வழங்க வர்த்தக சங்கம் வலியுறுத்தல்!
, புதன், 19 நவம்பர் 2008 (09:41 IST)
மதுரை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பரவலாக்க புதிய ரயில் திட்டங்களுக்கு தமிழக அரசு தனது பங்கினை அளித்திட ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் முதுநிலை தலைவர் எஸ். ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் மாநிலத்தின் மத்திய பகுதிகளில் உள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகின்றன.

இந்த மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம். இது பற்றி மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லிலிருந்து பெரியகுளம், தேனி, போடி வழியாக லோயர் கேம்ப் வரையிலும், திருவண்ணாமலையிலிருந்து செங்கம் வழியாக ஜோலார்பேட்டை வரையிலும், நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரையிலும், மொரப்பூரிலிருந்து தர்மபுரி வரையிலும், அரியலூரிலிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரையிலும் 5 புதிய ரயில் திட்டங்களை நிறைவேற்ற ரூ.1,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், தமிழக அரசு தனது பங்கான ரூ.750 கோடியை வழங்க ஒப்புதல் தர மறுத்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. இதனால் தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து பாதிக்கும்.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்கள், தங்கள் மாநில ரயில் திட்டங்களுக்கு பங்குத்தொகையை அளித்திட உடனுக்குடன் ஒப்புதல் அளித்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தான், சீரான தொழில் வளர்ச்சி காண முடியும்.

எனவே, தமிழக அரசு ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசின் நிதிப் பங்களிப்பை உடனடியாக உறுதிசெய்வதுடன், ரயில் திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.



Share this Story:

Follow Webdunia tamil