Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உற்பத்தி வரி குறைப்பு பரிசீலனை-சிதம்பரம்.

உற்பத்தி வரி குறைப்பு பரிசீலனை-சிதம்பரம்.
, செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:29 IST)
புது டெல்லி: வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவை விலை, கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உற்பத்தி வரியை குறைப்பது பற்றி பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சபர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பும் (CII), உலக பொருளாதார அமைப்பும் (World Economic Forum) இணைந்து இந்திய பொருளாதார மாநாட்டை நடத்துகின்றன.

இதில் பேசும் போது சிதம்பரம், தங்கும் விடுதிகள், விமான போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குடியிருப்பு விலையை குறைக்க வேண்டும்.

இதே போல் கார், இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டும்.

தற்காலிகமாக விலைகளை குறைக்கலாம். மீண்டும் விற்பனை அதிகரிக்கும் போது, இதை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கலாம்.

வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டியை முக்கால் விழுக்காடு குறைத்துள்ளன. ஆனால் ஒரு சிலரே வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க தயாராக உள்ளனர். இதற்கு காரணம் ஒருவர் வீட்டை வாங்கினால், அதன் மதிப்பு உயருமா என்று யோசிக்கின்றனர்.

அதே நேரத்தில் கார் அல்லது இரு சக்கர வாகனத்தை வாங்க நினைப்பவர்கள், இதன் மதிப்பு குறையும் என்பதை அறிந்தே வாங்குகின்றனர்.

தற்போது விலையை குறைப்பதால் குறுகிய காலத்திற்கு இலாபம் குறையலாம். ஆனால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, அதிக அளவு முதலீடுகள் பயன்படாமல் இருப்பது, இதனால் வருவாய் இல்லாமல் இருப்பதை விட, விலையை குறைப்பது சிறந்தது.

மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி பாதிக்காமல் இருக்கும் படி தேவையான நடவடிக்கை எடுக்கும்.

தற்போது நுகர்வோர் செலவழிப்பது குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டியதுள்ளது. மற்ற துறைகளிலும் வளர்ச்சி குறைந்து பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். விலைகளை குறைப்பதன் மூலம், நுகர்வோர் செலவழிப்பது அதிகப்படுத்தலாம்.

எந்த துறையாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நான் உற்பத்தி வரியை குறைக்கும் யோசனையை பரிசீலிக்கத் தயாராக உள்ளேன் என்று கூறிய சிதம்பரம், இந்த வருட துவக்கத்தில் அரசு உற்பத்தி வரியை 16 விழுக்காட்டில் இருந்து 14 விழுக்காடாக குறைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

அவர் மேலும் பேசும் போது, இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்பதிகரமாக இருக்கும். இந்த நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக அதிகரிக்கும். அடுத்த வருடத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் என்று கூறினார்.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு , இது பற்றி ரிசர்வ் வங்கி கவர்னர் தான் முடிவு எடுக்க முடியும் என்று பதிலளித்த சிதம்பரம், வட்டியை குறைப்பதற்கு முன்பு, பணவீக்கம் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil