புது டெல்லி: தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிக அளவு பாதிக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை சகாக்களுடனும், ரிசர்வ் வங்கி கவர்னருடனும் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
அத்துடன் இந்திய நிறுவனங்கள் அயல் நாடுகளில் வாங்கும் கடனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிக அளவு உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டும்.
தற்போது அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வெளியேற்றம், மற்ற நாடுகளில் கடன் கிடைப்பதில் முடக்கம், ஏற்றுமதி பாதிப்பு போன்ற காரணங்களினால் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், இரும்பு தாது, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து வருகிறது.
இவற்றின் விலை குறைந்தாலும், அதன் பலன்கள் கிடைக்காது. ஏனெனில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதே.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சென்ற வாரம் இறுதியில் வாஷிங்டனில் ஜீ-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்த கூட்டத்தில் கருத்து பரிமாற்றம் மட்டுமே நடந்தது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக் காலம் ஜனவரி 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஹூசைன் ஒபாமாவின் கொள்கைகள், நடவடிக்கைகளைப் பொறுத்தே, அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் இருக்கும்.
இந்நிலையில் அந்நிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில் நேற்று ஆலோசனை நடத்தப் பட்டது. இந்த குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படவில்லை.