கொச்சி: சின்டிகேட் வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் இருந்து ஒரு வருடம், அதற்கும் அதிக காலத்திற்கான வைப்பு நிதிக்கு அரை விழுக்காடு வட்டி குறைக்கப்படும் என்று சின்டிகேட் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜார்ஜ் ஜோசப் தெரிவித்தார்.
கேரளாவில் முவாட்டுபுழா என்ற ஊரில் வங்கியின் 149 வது கிளையை ஜார்ஜ் ஜோசப் இன்று துவக்கிவைத்தார்.
கொச்சியில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசுகையில், சின்டிகேட் வங்கி சமீபத்தில் வீட்டு கடன், வாகனம், கல்வி கடனுக்கு 0.75 விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது.
இந்த வருடம் புதிதாக 75 கிளைகள் திறக்கப்படும். குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கன்ட், ஒரிசா மாநிலங்களில் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளன. இந்த மாநிலங்களில் ஏற்கனவே திட்ட மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் மூன்று கிளைகள் திறக்கப்படும். அந்நிய நாடுகளில் கிளை திறக்கும் திட்டம் இல்லை. உள்நாட்டில் அதிக கவனம் செலுத்தப்ப்டும். இந்த வருட இறுதிக்குள் மொத்தம் உள்ள 2,187 கிளைகளும் இணைக்கப்பட்டு, கோர் பாங்கிங் முறையில் கொண்டுவரப்படும்.
அமெரிக்காவில் நடந்ததை போல், இந்தியாவில் எந்த வங்கியும் திவாலாகும் வாய்ப்பு இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பாதுகாப்பான கட்டுப்பாடும், விதி முறைகளும் உள்ளன. இவை மற்ற நாடுகளின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்.
அதே நேரத்தில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்பட முடியாது. மற்ற நாடுகளில் ஏற்படும் பாதிப்பால், சில துறைகள் பாதிக்கப்படும்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீடு திரும்ப பெறுகின்றன. இதனால் பங்குச் சந்தையில் விலைகளில் மாற்றங்கள் இருக்கும்.
இதே போல் அந்நியச் செலவாணி சந்தையிலும் அதிக வேறுபாடு இருக்கும். ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு குறைந்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி, சமையல் எண்ணெய், நுகர்வோர் பொருட்கள், இயந்திரம் மற்றும் தளவாடங்களை இறக்குமதி செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி. ஆனால் அந்நிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி செய்தவைகளுக்கு பணம் வர தாமதமாகும். ஏற்றுமதியும் குறையும்.
சீனாவுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் பாதிப்பு குறைவுதான். ஏனெனில் சீனா உற்பத்தி செய்யும் பொருட்களில் 50 விழுக்காடு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இந்தியாவில் உள்நாட்டு சந்தையும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.