புது டெல்லி: ஜவுளி துறையில் உள்ள நூற்பாலை, நெசவு ஆலை போன்றவைகளில், உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை தடுக்க, ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள்க்கு ஜவுளித் துறை வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
பருத்தி செடியில் இருந்து பஞ்சு பிரித்தெடுக்கும் ஜின்னிங் தொழிற்சாலைகள் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலை உட்பட பல்வேறு தொழில் பிரிவுகள் உள்ளன. அத்துடன் கைத்தறி, பின்னலாடை போன்றவைகளுக்கு தேவையான நூல்களை நூற்பாலைகள் விற்பனை செய்து வருகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர், ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இலாபத்தை கருதி கதவடைப்பு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஜவுளி துறையில் கதவடைப்பால், அதிக எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்பாடமல் இருக்க, ஜவளி துறை சார்ந்த தொழில்களுக்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் என்று பிக்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்தது.
இந்தியாவில் 2005-06 நிதி ஆண்டில் ஜவுளித்துறையின் வளர்ச்சி எட்டு விழுக்காடாக இருந்தது. இதன் வளர்ச்சி, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஐந்து மாதகாலத்தில் 0.8 விழுக்காடாக சரிந்து உள்ளதை பிக்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த துறைக்கு அரசு சிறப்பு உதவிகள் வழங்கவில்லை எனில் அதிக அளவு கதவடைப்பு ஏற்படும் என்று பிக்கி எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜவுளி துறையில் உள்ள தொழிற்சாலைகளின் இலாபம் 99 விழுக்காடு சரிந்துள்ளது.
அத்துடன் கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் முதலீடு செய்வது 66 விழுக்காடு குறைந்துள்ளது.
இந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில், ஜவுளி துறைக்கு சிறப்பு உதவிகள் செய்வது மிக அவசியம்.
இவைகள் வாங்கியுள்ள கடனை திருப்பி கட்ட ஒரு வருடம் விலக்கு அளிக்க வேண்டும். அத்துடன் மற்ற நாடுகளில் உள்ள அளவிற்கு ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இவை செலுத்தும் உள்நாட்டு வரிகளையும் திருப்பி வழங்க வேண்டும்.
அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வரி விலக்கை, மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிக்க வேண்டும். ஜவுளி ஆலைகளை நவீனப்படுத்தும், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில், கடந்த வருடம் நிலுவையில் உள்ள தொகையை, ஜவுளி, நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். செயற்கை இழைகளுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்.
அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழை நூல்களுக்கு, 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்.
ஏற்றுமதி நிறுவனமாக அங்கீகரித்துள்ள ஜவுளி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு, பத்து வருடங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த காலவரையளவு 2009 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.
தற்போது ஜவுளி நிறுவனங்களின் இலாபம் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வருமான வரி விலக்கை திரும்ப பெற கூடாது. ஏனெனில் இவற்றின் இலாபத்தில், வருமான வரியின் பங்கு 34 விழுக்காடாக உள்ளது என்று பிக்கி கூறியுள்ளது.