மும்பை: இந்தியாவில் உள்ள முன்னணி உருக்கு நிறுவனங்கள், உருக்கு பொருட்களின் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5,000 ஆயிரம் வரை குறைத்துள்ளன.
பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணையம் (செயில்) ஏற்கனவே உருக்கு விலையை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6,000 வரை குறைத்துள்ளது.
இதே போல் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனமும் விலையை குறைத்துள்ளன.
இதை தொடர்ந்து நேற்று ரூயா குழுமத்தைச் சேர்ந்த எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனமும் உருக்கு விலையை டன்னுக்கு ரூ.4,000-ரூ.5,500 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
முன்பு இருந்த உருக்கு விலையுடன் ஒப்பிடுகையில், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம், உருக்கு விலையை 25% முதல் 30% வரை குறைத்துள்ளது.
டாடா ஸ்டீல், இஸ்பாட் இன்டஸ்டீரிஸ் ஆகிய உருக்கு உற்பத்தி நிறுவனங்களும், இந்த வாரத்திற்குள் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் உருக்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை உருக்கு விலை சராசரியாக 1 டன் 1,200-1,250 டாலராக இருந்தது. தற்போது 1 டன் 700 டாலர் என்ற அளவில் உள்ளது.
உலக சந்தையில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறைந்ததால், இதன் இறக்குமதி அதிகரித்து விட்டது. இதனால் உள்நாட்டு உருக்காலைகள் பாதிக்கப்பட்டன. சில உருக்கு ஆலைகள் உற்பத்தியை குறைத்தன.
இத்துடன் உள்நாட்டிலும் வாகன விற்பனை மந்தமாக உள்ளது. ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் உருக்கு தேவை குறைந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு தற்போது உருக்காலைகள் விலையை குறைத்துள்ளன.