Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான பெட்ரோல் விலை குறைப்பு!

விமான பெட்ரோல் விலை குறைப்பு!
, திங்கள், 3 நவம்பர் 2008 (11:39 IST)
புது டெல்லி: விமான பெட்ரோல் விலையை குறைப்பதாக, பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், விமான பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்தது.

காருக்கு பயன்படுத்தும் பெட்ரோல் போல, விமான பெட்ரோலின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துவது இல்லை.

சர்வதேச சந்தையில் 15 நாட்களில் இருந்த விலையை, சராசரியாக கணக்கிட்டு, பெட்ரோலிய நிறுவனங்கள், விமான பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கின்றன.

இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், பெட்ரோல் வாங்கிய வகையில், பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.2,900 கோடிக்கு மேல் பணம் பாக்கி வைத்துள்ளன. இதை ஆறு மாதங்களில் தவணைகளில் செலுத்த முடிவாகியுள்ளது.

அத்துடன் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு 90 நாட்களில் பணம் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் பெட்ரோல் விலை ஏற்றம், மற்றொரு புறம் பொருளாதார நெருக்கடியால் உள்நாட்டு,

அயல்நாட்டு பயணிகள் பயணம் செய்வது குறைந்தது.

இதனால் தனியார் துறை விமான நிறுவனங்கள் கடுமையாக இழப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவானது.

கடந்த பதினைந்து தினங்களுக்கு முன், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரே நாளில் 1,900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதன் பிறகு மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் உட்பட, பலரின் தலையீட்டினால், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்தது.

இதே போல் மற்றொரு தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான கிங்பிஷரும் சிலரை பண நீக்கம் செய்திருப்பதுடன், செலவை குறைக்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

விமான நிறுவனங்களின் நஷ்டத்தை குறைக்க, எரிபொருள் செலவு உட்பட நிர்வாக செலவுகளை குறைக்க வேண்டும். இவற்றின் மொத்த செலவில் 40 முதல் 50 விழுக்காடு வரை விமான பெட்ரோலுக்காக செலவாகிறது. இதனால் விமான பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்.

அதே போல் மாநில அரசுகள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

விமான நிறுவனங்களின் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, நேற்று மத்திய அரசு விமான பெட்ரோல் மீதான 5% இறக்குமதி வரியை முழுவதும் நீக்குவதாக அறிவித்தது.

இதன் மீது தற்போது 8% உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் விமான பெட்ரோலுக்கும், இதன் சர்வதேச விலையை கணக்கிட்டு, 5% இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அத்துடன் 8% உற்பத்தி வரியும் விதிக்கப்பட்டது.

விமான பெட்ரோலுக்கு, இந்தியா முழுவதும் ஒரே அளவாக இல்லாமல், மாநில அரசுகள் பல்வேறு அளவுகளில் மதிப்பு கூட்டு வரி (விற்பனை வரி) விதிக்கின்றன.

இந்த மதிப்பு கூட்டு வரி (வாட்) விதிப்பது, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதனால் மதிப்பு கூட்டு வரி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

தமிழகத்தில் விமான பெட்ரோலுக்கு 29% வாட் வரி விதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இதன் மீதான வாட் வரியை, கேரள மாநில அரசு சமீபத்தில் 29% இல் இருந்து 4% ஆக

குறைத்துள்ளது. ஆந்திர மாநில அரசும் 25% இல் இருந்து 4% ஆக குறைத்துள்ளது

மத்திய அரசு விமான பெட்ரோலுக்கான இறக்குமதி வரியை நீக்கியிருப்பதால், இதன் விலை 16.8% குறையும். தற்போதைய கணக்குப்படி டெல்லியில் 1 லிட்டர் விலை ரூ.47.01 ஆக குறையும். இதன் விலை சென்ற மாதத்தில் லிட்டர் ரூ.56.44 ஆக இருந்தது.

தமிழகத்தில் சென்னையில் விலை லிட்டர் ரூ.51.89 ஆக குறையும். இதன் விலை முன்பு லிட்டர் ரூ.62.05 ஆக இருந்தது. இத்துடன் வாட் வரி விதிக்கப்படுகிறது.

விமான நிறுவனங்கள் பெட்ரோல் விலை அதிகரித்த காரணத்தினால், இவை பயணிகளின் கட்டணத்தையும் உயத்தின. பெட்ரோல் விலை குறைந்தாலும், இந்த கட்டணங்களை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்று
தெரிகிறது.

ஏனெனில் இவை வாடகைக்கு எடுத்துள்ள, அல்லது விலைக்கு வாங்கியுள்ள விமானங்களுக்கான கட்டணத்தை, அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. அதே போல் விமான ஓட்டிகள், மூத்த அதிகாரிகளின் சம்பளமும் டாலராக கொடுக்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் பெட்ரோல் விலை குறைந்தாலும், விமான நிறுவனங்களின் செலவு குறைய வாய்ப்பில்லை என்று இத்துறையில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொதுத்துறை நிறுவனம் உட்பட விமான நிறுவனங்கள், மாநிர அரசுகள் விதிக்கும் வாட் வரியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு தகுந்த மாதிரி இதை அறிவிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் இணைக்க வேண்டும். இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 4% வாட் விதிக்க முடியும். அப்போது தான் பயணிகளுக்கு பயன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil