சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக நமது நாட்டின் நிதிச் சந்தையி்ல் ஏற்பட்டுள்ள ரொக்க நெருக்கடியைத் தளர்த்த வங்கிகளின் ரொக்க இருப்பு விகதத்தையும், குறைந்த கால கடன் மீதான வட்டியையும் (ரீபோ ரேட்) இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) மேலும் குறைக்க வேண்டும் என்று பொருளாதார அமைப்பான ஐ.இ.ஜி. கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.இ.ஜி. என்றழைக்கப்படும் பொருளாதார வளர்ச்சி கழகம், நமது நாட்டின் பொருளாதாரத்தை உந்தித் தள்ள இந்த நடவடிக்கைகள் மிக அவசியம் என்று கூறியுள்ளது.
நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்க இதுவரை 250 அடிப்படைப் புள்ளிகள் (2.5 விழுக்காடு) அளவிற்கு ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்து இந்திய மைய வங்கி. இதனால் நிதிச் சந்தைக்கு ரூ.1,80,000 கோடி ரொக்கம் கிடைத்தது. ஆயினும் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது.
இது மட்டுமின்றி, வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த காலக் கடன்களின் மீதான வட்டியையும் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது மைய வங்கி. இதனால் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்தன.
ஆயினும் இது போதாதென்று பொருளாதார வளர்ச்சி கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடன்களின் மீது வங்கிகள் வசூலிக்கும் வட்டியை மேலும் குறைக்கவேண்டும், அதற்கு வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் குறைப்பதன் மூலம் மட்டுமே இடைக்கால பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio - CRR) என்பது, வணிக வங்கிகள் ஒரு தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை மைய வங்கியில் வைத்திருக்க வேண்டும். அது எத்தனை விழுக்காடுகள் என்பதை மைய வங்கி நிர்ணயிக்கும். இதையே ரொக்க இருப்பு விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது.