நாகர்கோவில்: மார்த்தாண்டத்தில் செயல்படும் கல்குளம் விளவங்கோடு வட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மிளகு பாக்கெட் போடும் இயந்திரம் இயக்கி வைக்கப்பட்டது.
இந்த சங்கம் விவசாயிகளின் விளைபொருள்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் தரமான மிளகு, கூட்டு கொள்முதல் குழு மூலம் தமிழகத்திலுள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக முதல்வரின் மலிவு விலையில் மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு, இந்த சங்கத்தின் தரமான மிளகு 25 கிராம் அளவில் 6 லட்சம் பாக்கெட்டுகள் தயார் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
25 கிராம் நல்ல மிளகு பாக்கெட்டுகள் தயார் செய்வதற்காக இரு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.. இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலம் மிளகு பாக்கெட் தயார் செய்யும் பணியை கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஆ.க. சிவமலர் தொடக்கிவைத்தார்.