புது டெல்லி: பணவீக்கம் நான்காவது வாரமாக குறைந்துள்ளது.
மொத்த விலை அட்டவணையை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அக்டோபர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.68 % ஆக குறைந்துள்ளதாக, இன்று மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு முந்தைய வாரத்தில் 11.07 % இருந்தது.
கடந்த நான்கு மாதங்களாக பணவீக்கம் 11% என்ற அளவிற்கும் அதிகமாக இருந்து வந்தது. தற்போது முதன் முறையாக 11% க்கும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் பணவீக்கம் 3.11 % இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் பணவீக்கம் 8.75% ஆக இருந்தது. இதற்கு பிறகு மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை அதிகரித்தவுடன், பணவீக்கமும் அதிகரித்துவிட்டது.
உலக சந்தையில் தற்போது பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் அரசின் விலை கட்டுப்பாட்டில் இல்லாத எரி எண்ணெய் 6%, டீசல் விலை 3% குறைந்துள்ளது. இவற்றை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.
இந்த வாரம் கோதுமை, துவரம் பருப்பு விலை தலா 2 %, உளுந்தப் பருப்பு விலை 1 %, பழங்களின் விலை குறைந்துள்ளது.
அதே நேரத்தில் எண்ணெய் கடுகு விலை 1%
அதிகரித்துள்ளது.
அதே போல் காய்கறி விலை 2.3%, மசாலா பொருட்களின் விலை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் எரி எண்ணெய், சில தயாரிப்பு பொருட்களின் விலை குறைந்துள்ளது.
கிரிசில் ஆய்வு நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி கூறுகையில், பணப்புழக்கத்தின் அளவை பொறுத்து ரிசர்வ் வங்கி, வங்கிகளின் இருப்பு விகிதத்தை மேலும் 1 முதல் ஒன்றரை விழுக்காடு வரை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி உடனடியாத வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.
ஹெச்.எப்.டி.சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அப்கிக் புருவா கூறுகையில், பணவீக்கம் குறைந்து வருவதால், அடுத்த சில வாரங்களில் ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு முதல் 1 விழுக்காடு வரை குறைக்க வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் விகிதம் ஒற்றை இலக்கமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.