Publish Date: Tue, 28 Oct 2008 (16:07 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (16:06 IST)
சென்னை; பெரிய தொழில் நிறுவனங்கள், அவை தயாரிக்கும் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்களை குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகின்றன.
இதற்கு உரிய பணத்தை சில பெரிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவதில்லை.
இதனால் பாதிக்கப்படும் சிறு, குறு பிரிவு நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவை பணத்தை பெற்றுத் தரும் பணியை செய்ய குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கூட்டம் கடந்த 22 ஆம் தேதி தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 40 குறு, சிறு தொழில் நிறுவனங்களின் புகார் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இந்த புகாருக்கு உள்ளான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட பதில் மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது.
இதில் 4 மனுக்கள் மீது ரூ.26.93 லட்சம் அளவில் தீர்வு காணப்பட்டன.
இந்த கூட்டம் இதன் தலைவரும், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் கோ. சந்தானம் தலைமையில் நடைபெற்றது. இதில் டான்ஸ்டியா உப தலைவர் சி.கே.மோகன், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவன தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு கூட்டமைப்பின் தலைவர் டி.இராமகிருஷ்ணன், இந்தியன்
ஓவர்சீஸ் வங்கி மற்றும் முதன்மை வங்கி முதன்மை மேலாளர் (கடன் வசதி) ஏ.ரவி, தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் டி. கிருபாகரன் ஆகிய உறுப்பினர்களும் கலந்து
கொண்டனர்.
ஏற்கனவே சென்னை குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றம் கடந்த 31.10.2007 முதல்
ஏற்கனவே மூன்று முறை கூடியுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கடலுhர் மாவட்டங்களைச் சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் அளித்த புகார் மனுக்கள் மீது
விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 14 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, ரூ. 476.77 இலட்சங்கள் அளவில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை பெற்றுத்தரப்பட்டது.
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு வளர்ச்சி சட்டம் 2006 இன் கீழ் அரசாணை எண்.7, சிறு தொழில் துறை, நாள் 10-07.2007 இன் படி சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்துhர் ஆகிய இடங்களில் நான்கு குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் அடிப்படையில் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய, காலதாமதமான பணப்பட்டுவாடாக்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இந்த தீர்வு
மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருளை வாங்கும்
நிறுவனம் உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய் யாவிட்டால், அசல் தொகையுடன் ரிசர்வ் வங்கி
விதித்துள்ள வட்டியினை போல 3 மடங்கு கூட்டு வட்டியும் சேர்த்து வசூல் செய்ய வழிவகை
செய்கிறது.
இந்த அரசாணைக்குட்பட்டு, பாக்கி தொகை சேர வேண்டிய குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் உறுதி மொழி பத்திரம், வேண்டுகோள் கடிதங்களுடன்
கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள குறு மற்றும் சிறுதொழில் நிறுவன வசதியாக்க மன்றத்தில் முறையிடலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 28 Oct 2008 (16:07 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (16:06 IST)