மின்னணு முத்திரை தீர்வை- தமிழக அரசு முடிவு!
சென்னை: வீடு உட்பட சொத்துக்கள் விற்பனை செய்யும் போது முத்திரைத் தாளில் (பத்திரம்), வாங்குபவரின், விற்பனை செய்பவரின் விபரம், சொத்துக்கள் பற்றிய விபரம் குறிக்கப்பட்டு பதிவாளர் அலுவகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
சொத்துக்களின் மதிப்பிற்கு தகுந்தாற்போல், அரசு முத்திரை கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த மதிப்பிற்கு முத்திரை தாள் வாங்கி பதிவு செய்ய வேண்டும்.
இத்துடன் பதிவுக் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும்.
இந்த முத்திரைத் தாள்களில், போலி முத்திரைத் தாள்களின் நடமாட்டம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கியும், அவரது கூட்டாளிகளும் சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிற்கு போலி முத்திரைத்தாள் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த வழக்கு பல்வேறு நீதி மன்றங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் போலி முத்திரைத் தாள்களின் புழக்கத்தை தவிர்த்திட மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதிதான் மின்னணு மூகமாக முத்திரை தீர்வையை வசூலிப்பது.
தமிழக அரசும் மின்னணு மூலமாக முத்திரை தீர்வையை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான முடிவு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போலி முத்திரைத்தாள்களின் புழக்கத்தைத் தவிர்த்திட பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்குச் செலுத்தப்படவேண்டிய முத்திரைத் தீர்வையை வசூலிக்க மாற்றுவழியாக மின்னணு மூலமாக முத்திரைத் தீர்வையைச் (e-stamping)
செலுத்தும் முறையை மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (Stock Holding Corporation of India Limited) என்ற நிறுவனம் மூலமாகச் செயல்படுத்திட அமைச்சரவை முடிவு செயுதுள்ளது.
இந்த மின்னணு முத்திரை தீர்வை முறை முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது