மும்பை: ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ், மும்பையில் பொருளாதார அறிக்கையை வெளியிட்டார்.
இதில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று பல தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. அதே நேரத்தில் 2008-09 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.5 முதல் 8 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளது.
வங்கி, நிதி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க சென்ற வாரத்தில் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் பணப்புழக்கம் ரூ.1,85,000 கோடி வரை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கைகல் உரிய பலனை அளிக்க துவங்கவில்லை.
பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது.
ஆனால் கால் மணி ரேட் எனப்படும் வங்கிகளுக்கான நிதி சந்தையில் கடனுக்கான வட்டி குறைந்துள்ளது.
உலக சந்தையில் உணவு பொருட்கள், உலோகம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆயினும் மார்ச் இறுதிக்குள் பணவீக்கம் 7 விழுக்காடாக குறையும் என்று அறிவித்திருந்தது. இதில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
பணவீக்கம் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, வட்டி விகிதம் முன்பு உள்ள அளவான 6 விழுக்காடே தொடரும் என்று கூறியுள்ளது. அதே போல் வங்கிகளுக்கு ரிசர்வ் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிபோ-REPO) 8 விழுக்காடாகவும், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கும் பணத்திற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரிபோ- REVERSE REPO) 6.5 விழுக்காடாக தொடரும் என்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த 11 ஆம் தேதி வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 விழுக்காட்டில் இருந்து 6.5 விழுக்காடாக குறைத்தது. இதனால் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் ரூ.1 லட்சம் கோடி அதிகரிக்க வழி செய்தது.
இதே போல் கடந்த 20 ஆம் தேதி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு குறுகிய காலத்திற்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 விழுக்காடிட்ல் இருந்து எட்டு விழுக்காடாக குறைத்தது.
பொதுத்துறை வங்கிகள் உட்பட பல வங்கிகள், ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை, கடன் கொள்கை அறிவித்த பிறகு, வட்டியை குறைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளன.