வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தில் (ரீப்போ ரேட்) ஒரு விழுக்காடு குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், நுகர்வோர் பொருட்களுக்கான கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதத்தை குறைப்பதற்காகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் கடந்த 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு ரிசர்வ் வங்கி ரீப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது.
இதனால் நிதிக் கொள்கை சுமூகமாக செயல்படவும், நிதிச் சந்தையில் வளர்ச்சி சுமூகமான நிலையை எட்டவும் ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி விகிதக் குறைப்பு ஏதுவாகும் என்று ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களை மாற்றியமைப்பது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யக்கூடும் என்று கார்ப்பரேஷன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி. சாம்பமூர்த்தி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆர்பிஐ மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளில் ரீப்போ விகிதக் குறைப்பும் ஒன்று என்றும் அவர் கூறினார்.