புது டெல்லி: வங்கி உட்பட நிதி சந்தையில் தேவையான பணப்புழக்கம் உள்ளதா என்று பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வங்கிகளில் பணப்புழக்கம் ஏற்படுத்துவதற்கும், இவை தொழில், வர்த்தக நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களுக்கு தேவையான கடன் கிடைப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்ற வாரம் ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை ஒன்றரை விழுக்காடு குறைத்தது. இதன் மூலம் நிதி சந்தையில் 60 ஆயிரம் கோடி பணப்புழக்கம் ஏற்படும்.
அத்துடன் வங்கிகள் பரஸ்பர நிதி நிறுவனங்களின் வைப்பு நிதி சான்றிதழ்களை ஈடாக கொண்டு, இவைகளுக்கு கடன் கொடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
வங்கிகள் தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே கொடுப்பதாக வாக்குறுவதி அளித்த கடன்களை எவ்வித தாமதமும் இன்றி தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை ஒத்திவைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.
பெட்ரோலிய நிறுவனங்கள், உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள கடன் பத்திரங்கள் மீது, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனால் நேற்று பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கின. இவை கடந்த இரண்டு வாரங்களாக பங்குகளை தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில், நேற்று இரவு நடந்தது. இது பற்றிய விபரங்களை தெரிவிக்க சிதம்பரம் மறுத்துவிட்டார்.
இது குறித்து விபரம் இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், மற்றும் உயர் அதிகாரிகள் நெருக்கடியை தீர்ப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கியதாக தெரிகிறது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறுகையில். நாங்கள் நிலைமையை பரிசீலித்தோம். சூழ்நிலை நன்றாக உள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக கருதுகிறோம்.
நாங்கள் என்ன முடிவு எடுத்தோம் என்று கூற இயலாது. எதை செய்யவேண்டுமோ, அதை நாங்கள் செய்வோம் என்று கூறினார்.