Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலீட்டாளர்கள் பீதி அடைய வேண்டாம்-சிதம்பரம் வேண்டுகோள்!

முதலீட்டாளர்கள் பீதி அடைய வேண்டாம்-சிதம்பரம் வேண்டுகோள்!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (12:23 IST)
புது டெல்லி: பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் பீதி அடைய வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இன்று மூன்று கிழக்காசிய நாடுகளின் மற்றும் ஆஸ்ட்ரேலியாவின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் பீதி அடைய வேண்டாம்.

நமது நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, செபி ஆகிய மூன்றும் கடந்த வார இறுதியில் ஆலோசனை நடத்தியுள்ளன. நான் கடந்த இரண்டு நாட்களாக செபி தலைவர், ரிசர்வ் வங்கி கவர்னருடன் பல முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். நாங்கள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். தேவையான நேரத்தில் உடனே தக்க நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்ள வங்கிகள் தேவையான கடன்களை கொடுக்கும். இந்த வங்கிகளுக்கு கடனை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு காரணம், நிதி சந்தையில் பணப்புழக்கம் குறைந்தது தான். இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள பணம் பத்திரமாக உள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் அவசரப்பட்டு பங்குகளை விற்பனை செய்ய வேண்டாம். பங்குச் சந்தை நிலை இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் விற்பனை செய்யும் பங்குகளை, மற்றொருவர் ஏன் வாங்குகின்றார் என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய கருத்துப்படி, அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் பீதி அடைய வேண்டிய காரணமும் இல்லை.

பங்குச் சந்தை, நிதிச் சந்தை உட்பட அனைத்திலும் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கையுடன் இருந்து, சரியான முடிவு எடுத்தால், உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலும் பாதிப்படையாமல், வலிமையான பொருளாதார நாடாக வளரும்.

கடந்த வாரம் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஆஸ்ட்ரேலியா ஆகியவை பொருளாதார நிலைமையை சீரடைய பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

இதன் விளைவாக இன்று காலை முன்று ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்ட்ரேலியா பங்குச் சந்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.

இந்த சாதகமான நிலையை புரிந்து கொண்டு, நமது பங்குச் சந்தையும் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று சிதம்பரம் கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil