மும்பை: ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க இன்று வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை 1 விழுக்காடு குறைத்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், வங்கிகளில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் திணருகின்றன.
பணப்புழக்கத்தை அதிகரிக்க அந்நாட்டு ரிசர்வ் வங்கிகளும், அரசுகளும் வங்கிகளுக்கு அதிக அளவு பணத்தை வழங்குகின்றன. இதன் மூலம் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும் இந்த பிரச்சனையை சமாளிக்க ரிசர்வ் வங்கி சென்ற வாரம் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. இதன் மூலம் வங்கிகள் கடன் கொடுக்கவும், மற்ற தேவைகளுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி விடுவித்தது.
இந்த அரை விழுக்காடு குறைத்தது, நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று மீண்டும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை 1 விழுக்காடு குறைத்துள்ளது.
இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் துரிதமாக செயல்பட்டன. ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைப்பதாக அறிவித்தன. அத்துடன் 1 விழுக்காடு குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தன. இது பங்குச் சந்தை மேலும் சரிவதை தடுக்க சிறிது உதவியாக இருந்தது.
தற்போது வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 9 விழுக்காடாக இருக்கிறது. இது நாளை முதல் 7.5 விழுக்காடாக குறையும்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை பற்றி பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் மேலாண்மை இயக்குநர் அலேன் பெரியா (Allen Pereira) கருத்து தெரிவிக்கையில், வங்களில் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி அதிகரிப்பதால், கடன் தாராளமாக கிடைப்பதுடன், வட்டியும் குறையும் என்று தெரிவித்தார்.