Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி பாசனக் கரைகளை பலப்படுத்த திட்டம்!

காவிரி பாசனக் கரைகளை பலப்படுத்த திட்டம்!
திருச்சி : உலக வங்கி நிதி உதவியுடன் காவிரி டெல்டா பாசனக் கால்வாய்க் கரைகளை ரூ. ஆயிரம் கோடியில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ். ஆதிசேஷய்யா தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் 25ஆம் ஆண்டு விழா, பொதுப் பணித் துறையின் 150ஆம் ஆண்டு விழா, மேட்டூர் அணைத் திட்ட 75ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆதிசேஷய்யா பேசுகையில், விவசாயிகளுக்கு வெள்ளம், வடிகால் வசதி இல்லாதததால் ஏற்படும் பயிர் சேதம், நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பு போன்றவை முக்கியமான பிரச்னைகளாக உள்ளன.

வெள்ளப் பாதிப்பைத் தடுக்க ரூ.250 கோடி மதிப்பில் திட்டம் போடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாசன சங்கங்கள் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதுபோல, காவிரி பாசன பகுதி மாவட்டங்களிலும் இந்தச் சங்கங்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.

உலக வங்கித் திட்டம் வரும்போதுதான் இந்தச் சங்கங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை; தற்போதுகூட நடத்தலாம். இதற்காக கடந்த 2007ஆம் ஆண்டில் சட்டம் போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இந்தத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பதைத் தடுப்பதற்காக கிணறு மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 3 மாதங்களில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதற்காக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

காவிரி பாசன பகுதிகளில் உள்ள நீர்ப்பாசனங்கள் மிகவும் பழைமையானதாக உள்ளன. இந்தப் பாசனக் கரைகளைப் பலப்படுத்தி, சீர்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக திங்கட்கிழமை கலந்தாலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் மாத முடிவில் இறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி தேவைப்படும் என்பதால், திட்ட வரையறையை உலக வங்கிக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

அத்துடன் தடுப்பணைகள் திட்டத்துக்காக அரசு ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யுள்ளது. இதில் இந்த ஆண்டுக்காக ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று ஆதிசேஷய்யா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil