குன்னூர் : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் சென்ற வாரம் எல்லா ரக தேயிலை விலைகளும் குறைந்தன.
இங்கு கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் எல்லா ரக தேயிலை விலைகளும் அதிக அளவு குறைந்தது.
இலை ரக தேயிலைகள் 12 லட்சம் கிலோவும், டஸ்ட் ரக தேயிலைகள் 3 லட்சம் கிலோவும் ஏலத்துக்கு வந்தன. இதில் இலை ரகத்தில் ரூ.5 வரையும், டஸ்ட் ரகத்தில் ரூ.3 வரையிலும் விலை குறைந்தது.
வட மாநிலங்களில் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, அங்குள்ள வர்த்தகர்கள் புதுகணக்கு துவங்குவார்கள். இதனால் அங்கு 2 வாரங்களுக்கு தேயிலை விற்பனை மந்தமாக இருக்கும்.
அத்துடன் ஏற்றுமதியாளர்கள் அதிகபட்ச விலையாக ரூ.70 வரை மட்டுமே நிர்ணயித்துள்ளனர். ஆனால் தற்போது அனைத்து ரக தேயிலைகளும் ரூ.80 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.
டாடா தேயிலை நிறுவனம் அதிகளவு கொள்முதல் செய்தாலும் கடந்த வார விலையைக்காட்டிலும் ரூ.5 வரை விலை குறைத்தே கொள்முதல் செய்தனர். இதனால் ஒட்டுமொத்த சந்தை விலையும் சரிந்தே காணப்பட்டது. இந்நிலை இந்த மாதம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.