சென்னை: தமிழகமெங்கும் உள்ள காதி கிராப்ட்டுகளில் கதர் பருத்தி, பாலியஸ்டர், உல்லன் மற்றும் பட்டு உட்பட அனைத்து கதர் ரகங்களுக்கு 30 விழுக்காடு வரையிலும் தள்ளுபடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வளர்ச்சிப் பணிகள் பன்மடங்கு அதிகரித்து வந்துள்ளன. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் இந்தியாவில் மற்ற வாரியங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்போர் மற்றும் நெய்வோர் தொடர்ந்து வேலை வாய்ப்பினை பெறும் பொருட்டு கதர் ரகங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி அணிந்திடும் வகையிலும், தமிழகமெங்கும் உள்ள காதி கிராப்ட்டுகளில் கதர் பருத்தி, பாலியஸ்டர், உல்லன் மற்றும் பட்டு உட்பட அனைத்து கதர் ரகங்களுக்கு 30 விழுக்காடு வரையிலும் தள்ளுபடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தம் புதிய வடிவமைப்பில் பல நவீனரக 100 விழுக்காடு அசல் பட்டு சரிகை புடவைகளும், கதர் பருத்தி, பாலியஸ்டர் ரக வேஷ்டி, சட்டைகள் ஆயுத்த ஆடைகள் மற்றும் பட்டு எம்பிராய்டரி புடவைகள், வெஜிடபிள் டை சர்ட்டிங் வகைகளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காதி கிராப்டுகள் மூலம் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,000 விலையிலும் பட்டுப்படவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டுப் புடவைகள் அனைத்தும் தரமுள்ள பட்டினால் செய்யப்பட்டவை என்பதை நுகர்வோர் எளிதாக அடையாளம் கண்டிட உதவும் பொருட்டு மத்திய பட்டு வாரியம் வழங்கியுள்ள 'சில்க் மார்க்' லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. காதி கிராப்டில் இந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யவும் மற்றும் ரூ.11.52 கோடிக்கு கிராமப் பொருட்கள் விற்பனை செய்யவும் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கதர் துணியின் விற்பனையில் பெரும்பகுதி அதனை உற்பத்தி செய்யும் கிராமப்புற ஏழை மக்களுக்கு ஊதியமாகவே போய் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு வழங்கியுள்ள 30 விழுக்காடு வரையிலான சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வாழ்வு வளம் பெற உதவ வேண்டும் என்று தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம் கேட்டுக் கொள்கிறது.
அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு வழக்கம் போல் கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் உட்பட அனைத்து கதர் ரகங்களும் முறையாக கடன் முறையில் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களிலும், வாரியங்களிலும் பணிபுரிவோர் குறைந்தபட்சம் ரூ.500 மதிப்பிற்காவது கதர் ரகங்களை வாங்கி ஆதரிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.