திருவள்ளூர்: சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவிக்கிறது.
இந்த விருதுகளைப் பெற தொழில், வர்த்தக, சேவை துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சமூக, பொருளாதார மேம்பாட்டு பணிகளில் சிறந்து விளங்கும் தொழில், சேவை, வர்த்தக நிறுவனங்களின் சிறந்த 5 விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், நற்சான்றிதழும் வழங்கப்படும்
இந்த விருது பெற அனைத்து தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார், கூட்டுத் துறை நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
இவை பங்கு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.
தொழில், சேவை, வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர குழுமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.
தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், மன்றங்கள் மற்றும் சங்கங்கள் இவ்விருதினைப் பெற இயலாது.
இந்த விருதுக்கு ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். எனினும், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் பாராட்டத்தக்க பணிகளும் தகுதியானவையாக எடுத்து கொள்ளப்படும்.
விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருள்கள், சந்தைப் படுத்துதல், குழந்தைகள், இளைஞர் நலன் ஆகியவைகளில் சிறப்பாகப் பங்கேற்கும் நிறுவனங்களும் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள், விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்கள், விவரங்களுடன் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கோ, அல்லது ஆணையர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி சென்னை என்ற முகவரிக்கே அனுப்பி வைக்கலாம்.
இத்தகவலை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.