Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறப்பு பொருளாதார மண்டலம்- கேரள அரசின் கொள்கை!

சிறப்பு பொருளாதார மண்டலம்- கேரள அரசின் கொள்கை!
, புதன், 1 அக்டோபர் 2008 (12:00 IST)
திருவனந்தபுரம்: சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான கொள்கைகளை கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. பல மாநிலங்களில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநில அரசு சிறப்பு பொருளாதார கொள்கைகளை திங்கட்கிழமையன்று அறிவித்தது.

இதை மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அறிவித்தார். மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், இந்த கொள்கை மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், இனி எதிர்காலத்தில் அனுமதிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் பொருந்தும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அதிக அளவு நிலம் தேவை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கேரள மாநிலத்தில் ஒரே இடத்தில் மக்கள் வாழ்வது அதிகம். இதனால் இவை கேரளாவில் அமைப்பது சிரமம். இதை கருத்தில் கொண்டே, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

இவற்றை நெல் பயிரிடப்படும் நிலங்களில் அமைக்க அரசு அனுமதிக்காது. கேரளாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, தனியார் நிறுவனங்கள் நிலம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது. இவை அரசிடம் தான் தொழிற் பேட்டைகளை அமைக்க நிலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதே போல் கேரளாவில் அமையும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்கட்டண வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது. இதே போல் தொழிலாளர் நல சட்டம், தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை, தொழிலாளர் ஓய்வுகால வைப்பு நிதி சட்டங்கள் (பிராவிடன்ட் பண்ட்), தொழிற்சாலை சட்டம், கிராஜிவிட்டி போன்ற எல்லா சட்டங்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் பொருந்தும்.

மத்திய அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் தொழிற்சாலைகளுக்கு, தொழில் தகராறு சட்டம் “ 5 பி ” பிரிவில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

இந்த விதி விலக்கு கேரளாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மொத்த நிலப்பரப்பில் 70 விழுக்காடு நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மீதி உள்ள இடங்கள் சாலை, குடியிருப்பு, உணவு விடுதி, பூங்கா போன்ற பொழுது போக்கு வசதிக்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே, குடியிருப்புகளில் அனுமதி அளிக்க வேண்டும். மற்ற வெளி ஆட்களுக்கு விற்பனை செய்ய கூடாது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் பொருந்தும். இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 200 க்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. ஒற்றைச் சாளரமுறையில் அனுமதி வழங்கும் சட்டமும் பொருந்தும் என்று முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil