இந்தியாவின் தற்போதைய தொழிலாளர் நல சட்டங்களையும், தொழில் தகராறுகளில் தீர்வு காண்பதற்கான முறைகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் (உத்தர பிரதேசம்) சமீபத்தில் இத்தாலிய கூட்டு நிறுவனமான செர்லிகான் கிராஜியோனாஸ் (Cerlikon Grazianos) தலைமை நிர்வாகி எல்.கே.சவுத்ரி தொழிலாளர்களின் தாக்குதலில் இறந்தார்.
இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில், சவுத்ரி தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பற்றி தொழிற்துறையினர் மத்தியில் பிக்கி (FICCI) என்று அழைக்கப்படும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் இந்த நாட்டில் விதிகளும் சட்டங்களும் உள்ளன. இதன் மீது தொழிற்சங்கங்களுக்கு மரியாதை இல்லை. இதனால் அவர்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படலாம் என்று நினைக்கின்றனர்.
பல நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சவுத்ரி மீதான தாக்குதல் அபாயகரமானது. அத்துடன் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளதுடன். இதனால் தங்களின் நீண்டகால திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்துள்ள அயல்நாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்த ஆய்வில் பதிலளித்த சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் நாட்டின் முதலீடு வாய்ப்பையும் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
மற்றொரு ஆய்வில் இந்த கொலை பற்றி விசாரிக்க காவல் துறை அதிகாரி தலைமையில் குழு அமைத்ததை தவிர, உத்தரபிரதேச மாநில அரசு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொழில் துறை பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொழில் துறை வட்டாரத்திலும், முதலீட்டு நிறுவனங்கள் மத்தியிலும் எவ்வித நம்பிக்கையும் ஏற்படவில்லை. இந்த குற்றத்தைச் செய்தவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளில் கடுமையாக சட்டம், ஒழுங்கை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.