பின்னலாடை துணி உற்பத்தி செய்யும் (நிட்டிங்) நிறுவனங்கள் கட்டண உயர்வை வழங்காமல் பனியன் உற்பத்தியாளர்கள் காலம் கடத்தி வருவதாக கூறி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூரிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் பனியன் போன்ற பின்னலாடை தயாரிக்க தேவைப்படும் பின்னலாடை உற்பத்தி செய்யும் 400 க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன.
இவை கட்டண உயர்வை வழங்காமல், பனியன் உற்பத்தியாளர்கள் காலம் தாழ்த்துவதாக கூறி, நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் தினசரி சுமார் ரூ.15 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.
பின்னலாடை உற்பத்தி செய்ய தேவையான கச்சாப் பொருட்கள், தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) சார்பில் துணி உற்பத்திக்கான கட்டணத்தை 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை உயர்த்தி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய கட்டணத்தை பெரும்பாலான பனியன் தயாரிப்பாளர்கள் வழங்காமல் இழுபறி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் உள்நாட்டு பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். கட்டணம் உயர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று நிட்மா சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.