Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுறவு ஆலை தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ஊதிய உயர்வு!

கூட்டுறவு ஆலை தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ஊதிய உயர்வு!
, செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (11:32 IST)
தமிழகத்தில் இயங்கும் ஐ‌ந்து கூட்டுறவு ஆலைகளில் பணிபுரியும் 1,336 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக த‌மிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டி, பாரதி கூட்டுறவு நூற்பாலை, எட்டையபுரம், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய ஐந்து கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.

பஞ்சாலை தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 1998-ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில் அதன் பின்னர் ஊதிய திருத்தம் குறித்து மாநில தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 2001-ம் ஆண்டில் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கைகளை சிறப்பு தொழில் தீர்ப்பாயத்தின் பரிசீலனைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இயங்கும் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனையும், இந்த தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனையில் சுமுகமாக தீர்வினை விரைவில் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமி‌ழ்நாடு அரசு மேற்கொண்டது.

அ‌ந்த வகையில் இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் தலைமையில் ஒரு குழுவினை அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த குழுவானது ஆலை நிர்வாகங்கள் மற்றும் மத்திய தொழிற் சங்கங்களின் குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.

இந்த குழுவின் பரிந்துரைகளை முதலமைச்சரின் அனுமதியோடு, இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு தொழிலாளருக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ.560 அளவுக்கு பணபயன் கிடைக்கும் வகையில் ஊதிய உயர்வினை நடைமுறைப்படுத்த அண்மையில் ஆணை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, இயங்கும் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட, 22.09.2008-ல் தலைமைச்செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் முன்னிலையில் ஆலை நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் 01.01.2008 முதல் நடைமுறைபடுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் சுமார் 1,336 தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.560 அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் ஐ‌ந்து இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.90 லட்சம் நிதிச்சுமை ஏற்படும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil