கட்டண உயர்வை உடனடியாக நடைமுறைபடுத்தக் கோரி திருப்பூர் பின்னலாடை கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி நிறுவனங்கள் செப்டம்பர் 24ம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளின் மதிப்பைக் கூட்டும் பணியில் முக்கிய இடம் வகிப்பது கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி. கலைநயம் மிக்க இப்பணியில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொடர் மின்வெட்டு போன்றவைகளால், இவைகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகக்கூறி கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி சங்கம் சார்பில் கடந்த மாதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்த புதிய கட்டணத்தை வழங்குவதில் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்கள் காலம்தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இப்பிரச்னை குறித்து விவாதிக்க கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி சங்கம் சார்பில் சென்ற செவ்வாய்கிழமை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்க தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில் புதிய கட்டண உயர்வை உடனடியாக ஏற்றுமதியாளர்கள் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 24-ந் தேதி, அனைத்து எம்ப்ராய்டரி நிறுவனங்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
.